ஜனாதிபதி அநுரவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து : இணைந்து செயற்பட தயாரெனவும் அறிவிப்பு
இலங்கையின்(sri lanka) 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவு செய்யப்பட்டதற்கும், நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக ஹரினி அமரசூரிய(harini amarasuriya) தெரிவு செய்யப்பட்டமைக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் முக்கிய அமைப்பான உலகத் தமிழ் பேரவை ( Global Tamil Forum )(GTF) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் அதிகார மாற்றம் மற்றும் பிரச்சாரத்தின் போது இன மற்றும் மத சொல்லாடல்கள் இல்லாததை உலகத் தமிழர் பேரவை பாராட்டியதுடன் இது ஒரு நம்பிக்கையான முன்னுதாரணமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தியில் அனைத்து பிரஜைகளும் உள்ளடக்கம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் முறையான மாற்றத்தின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவை, இலங்கையின் அபிவிருத்தியில் அனைத்து பிரஜைகளையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
இதன்படி, ஜனாதிபதி திஸாநாயக்க தமிழ் சமூகத்தின் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்து, சமத்துவத்தையும் நீதியையும் உறுதிப்படுத்துவார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இலங்கையை கட்டியெழுப்ப தயார்
அத்துடன் புதிய நிர்வாகத்துடன் ஒத்துழைத்து இலங்கையைக் கட்டியெழுப்ப தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் உலகத் தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |