வேலைநிறுத்தத்தை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த போராட்டம் இன்று (11.04.2026) காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ''வைத்திய இடமாற்றம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
சேவைகள் வழமை போல்
நாம் திட்டமிட்டபடி இன்று காலை 8.00 மணியுடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவடைகின்றது.

அதன்படி, காலை 8.00 மணிக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இருப்பினும், எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தற்போது இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியர்கள் உடனடியாகத் தமது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும், தேவையற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு துணை போக வேண்டாம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (10.04.2026) நடந்த ஊடக சந்திப்பொன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |