ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு: பிரதமர் ஹரிணி வெளியிட்ட அறிவிப்பு
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில், பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுந்த முடிவை எடுப்பார் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (15) கண்டிக்குச் சென்ற பிரதமர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளுக்குச் சென்று மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்தார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் ஆலோசனை
இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட பிரதமர், நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நீதித்துறை, நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பை மதிப்பவர் என பிரதமர் ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.
அவர், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சரியான தீர்மானத்தை எடுக்கும் திறன் ஜனாதிபதிக்கு இருப்பதாகத் தனது நம்பிக்கையையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.
இதேவேளை, ஆரம்பத்தில் ஞானசார தேரர் சிறை உடைகளை அணிய வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேரணி, பின்னர் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாக மாறியது.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
காவல்துறை பேருந்நு வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |