மன்னாருக்கு திடீரென விஜயம் செய்த ஞானசாரதேரர்
மன்னார் திருக்கேதீசஸ்வர ஆலயத்தில் கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டுமென இடம்பெற்ற விஷேட பூஜையில் பங்கேற்க பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசாரதேரர் இன்றையதினம் விஜயம் செய்துள்ளார்.
இதன்போது மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை அரச காணியில் சுமார் 40 வருடங்களாக கோவில் மோட்டை பகுதி மக்கள் வேளாண்மை செய்து வருகின்ற நிலையில் குறித்த அரச காணியை தங்களுக்கு வழங்க வேண்டுமென கோவில் மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதம் உட்பட்ட பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நிலையில், வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த காணியை கோயில்மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
மறுபுறம் குறித்த காணி தங்களுக்கு வேண்டுமென மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரிவந்ததுடன் தென்னிலங்கை அமைச்சர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தை மீறி காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் போன்றவற்றை நாடியதுடன் வடக்கு மாகாணத்திற்கு இருக்கும் அற்ப சொற்ப அதிகாரங்களையும் குறைக்கும் விதமாக நடந்து கொண்டனர்.
இந்நிலையில் மன்னார் வந்த ஞானசாரதேரரை இடைவழியில் வழிமறித்த விவசாயிகள் தங்களின் காணிப்பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில்மோட்டை வயல் காணிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஞானசார தேரர், தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதைவிட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் ஆன நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.









