ஞானசார தேரர் தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
கலகொட அத்தே ஞானசார தேரரின் (Galagoda Aththe Gnanasara) தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த திருத்த மனுவுக்கு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
குறித்த மனு இன்றைய தினம் (11.02.2025) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர் ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் காமினி அல்விஸ், நீதிமன்றத்தின் முன் உண்மைகளை முன்வைத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு திகதி நிர்ணயிக்குமாறு கோரியுள்ளார்.
வழக்குப் பதிவு
அதன்படி, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இந்த மாதம் 25 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி அன்று கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மூலம் இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291(a) இன் கீழ் ஞானசார தேரர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்தது.
அந்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் இந்த திருத்த மனுவை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)