அநுர அரசின் அதிரடி : மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு எதிராக வழக்கு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித ராஜபக்சவுக்கு (Yoshitha Rajapaksa) எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய யோஷித ராஜபக்சவுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து நியாயமான விளக்கத்தை வழங்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தப் பணம் நிலையான வைப்புகள் மற்றும் வங்கி வைப்புகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும், இந்தக் கணக்குகள் டெய்சி ஃபொரஸ்ட் (Daisy Forrest) என்ற நபருடன் கூட்டுக் கணக்காகப் பராமரிக்கப்பட்டு வருவதும் விசாரணைகளில் தெரியவந்தது.
தொடரப்படவுள்ள வழக்கு
இந்த நிலையில் குறித்த வழக்கில் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்ணையும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்ணுக்கு எதிராக இன்று (11) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் பணமோசடி சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக வழக்குத் தாக்கல் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த பெண்ணுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)