யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
புதிய இணைப்பு
தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறி கோரி இன்று பிற்பகல் 4.00 மணிக்கு பாரிய எதிர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவுள்ள நிலையில் இந்தப் போராட்டத்தில் தமிழ் தாய்மார்களையும் கலந்துக்கொள்ளுமாறு சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணத்தினால் (Sugash Kanagaratnam) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க, விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என தையிட்டி காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள காணி உரிமையாளர்கள் இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு நாட்களிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தையிட்டி பகுதியில் உள்ள சுமார் 7 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி எவ்வித அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை எனும் விகாரை கட்டப்பட்டுள்ளது.
விகாரையின் கட்டுமானப் பணி
மக்கள் இந்தப் பகுதியில் இருந்த போர் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியேறியிருந்தனர். பின்னர் அப்பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
போர் நிறைவடைந்த நிலையில் மக்கள் மீள்குடியேற, இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அனுமதித்தனர். அவ்வேளை தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
இந்தப்பகுதியில் எவ்வித அனுமதிகளும் இன்றி. யாழ் மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் விகாரையின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி அப்பகுதிகளை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காணிகள் மீள கையளிக்கப்படாது இராணுவத்தினரின் உதவியுடன் விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு ஆதரவு
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான 4 ஏக்கர் காணியையும் காணி உரிமையாளர்களிடம் மீளகையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் சுமார் ஒரு வருட காலத்திற்கு மேலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) மற்றும் புதன்கிழமை (12) ஆகிய இரு நாட்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராடத்தில் ஈடுபட வேண்டும் என காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணி உரிமையாளர்களின் கோரிக்கையை அடுத்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு வழங்க வேண்டும் எனவும், அதில் யாத்திரிகள் தங்குமிடம், மடாலயங்கள் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் என்ற அமைப்பு யாழ். மாவட்ட செயலரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.
குறித்த அமைப்பின் தலைவர் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எனவும் பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றி இருந்தவர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் (Gajendrakumar) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)