அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விவகாரம் - அமைச்சருக்கு பறந்த கடிதம்
தமிழ் பௌத்த காங்கிரசினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் (Ramalingam Chandrasekar) கையளித்துள்ளனர்.
இந்த கோரிக்கை கடிதத்தை தமிழ் பௌத்த காங்கிரசின் தலைவர் சிதம்பரமோகன், செயலாளர் கந்தையா சிவராஜா ஆகியோர் இணைந்து இன்றையதினம் (10.2.2025) அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்துள்ளனர்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரையானது தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத விகாரை
அந்த சட்டவிரோத விகாரையை அகற்ற முடியாவிட்டாலும், அதற்கு அருகேயுள்ள மக்களது காணிகளையாவது உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.
தையிட்டி விகாரையும், நயினாதீவு விகாரையும் அமரபுரனிகாய என்ற அமைப்பின் கீழ் உள்ளது. எனவே இந்த விகாரை பிரச்சினைக்கு அந்த அமைப்பு தீர்வு வழங்க வேண்டும்.
நயினாதீவு விகாராதிபதிக்கு சொந்தமான காணி 20 பரப்பு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ளது. அந்த காணி மக்களுக்கு வழங்க வேண்டும்.
தையிட்டி விகாரைக்கு பின்பக்கமாக 8 ஏக்கர் மக்களது காணிகள் உள்ளன. அந்த காணிகளும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மாளிகை
கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையானது தனக்கு தேவையில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஜனாதிபதி மாளிகையை சுற்றுலாத்துறைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையானது சுற்றுலாத்துறைக்கு வழங்குவதால் பல்வேறு விதமான சீரழிவுகள் ஏற்படக்கூடும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) இந்து சமய பீடம் மற்றும் அரங்க கற்கைகள் பீடத்துக்கு தனியான கட்டடம் இல்லை.
ஆகையால் ஜனாதிபதி மாளிகையில் அந்த பீடங்களை அமைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |