ஈரானின் 14 கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய முட்டுக்கட்டை!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி திட்டம் தொடர்பான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் நிலையைத் தணிக்கும் பொருட்டு, ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்தர் அல் புசைதி இதில் நடுவராகச் செயற்பட்டுள்ளார்.
யுரேனியம் செறிவூட்டல் அளவைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அணுசக்தி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்த வேண்டுமென ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அணுசக்தி மையங்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் சார்பில் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவும் பங்கேற்றுள்ளனர்.
இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்த நிலையில், ஓமன் வெளியுறவு அமைச்சர் ஊடாகத் தமது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2018-இல் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை நீடித்து வருகின்றது.
கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில், தற்போது இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இருப்பினும், ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் போதே, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டின் 14 எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |