பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் தங்க நகை கொள்ளை :தமிழர் பகுதியில் சம்பவம்
மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டன் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் புகுந்த முகமூடி திருடன் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த சம்பவமானது நேற்றைய தினம்(24) புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு
குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த போது பின் பக்க வேலியால் வீட்டுக்குள் புகுந்த திருடன் சத்தம் போடக் கூடாது என்று கத்தி முனையில் மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கொள்ளையிட்டதுடன் குறித்த ஆசிரியை கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்ற முடியாமல் விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முருங்கன் காவல்துறையில் முறைப்பாடு
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முருங்கன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முருங்கன் காவல்துறையினர் வருகை தந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியையிடமிருந்து முகமூடித் திருடன் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள இரண்டரை(2-1/2) பவுண் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
