நோன்பு வழிபாட்டிற்கு சென்ற குடும்பம்! லட்சக்கணக்கில் திருட்டு
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 20 பவுண் தங்க நகைகளை திட்டமிட்டு திருடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட 5 ஆம் காலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வியாழனன்று (14) இரவு இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக மறுநாள் (15) காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
நகைகள் மீட்பு
இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர், சம்பவத்தினத்தன்று இரவு உரிமையாளர்கள் நோன்பு இரவு நேர வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பார்த்து 3 சந்தேக நபர்கள் இச்செயலை மேற்கொண்டதுடன் சுமார் 20 பவுண் நகைகளை குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து எடுத்து சென்றிருந்தனர்.
இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட சவளக்கடை காவல்துறையினர் இத்திருட்டில் ஈடுபட்ட சாளம்பைக்கேணியை சேர்ந்த 33, 26 ,28, வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்களை கைது செய்ததுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து திருடிச் செல்லப்பட்ட 20 பவுண் நகைகளையும் மீட்டிருந்தனர்
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கல்முனை நீதவான் முன்னிலையில் இன்று (18) முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |