17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தங்கங்கள்: தம்பதியினருக்கு அடித்த அதிஷ்டம்
தெற்கு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தம்பதிகள், 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தம்பதியினருடைய வீட்டிலுள்ள சமையலறையை புதுப்பிக்கும் போது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை கண்டறிந்துள்ளனர்.
பழங்கால இந்தியாவைப் பொறுத்தவரை அந்நிய நாட்டினரின் படையெடுப்புக்கு அஞ்சிய மக்கள் தாங்கள் சேர்த்து வைத்த பொன்னையும் பொருளையும் தங்களின் வருங்காலத்திற்காக பூமியில் புதைத்துவைக்கும் பழக்கத்தை கையாண்டு வந்தனர்.
பழமையான வீடு
இதனால் இன்றளவும் நம் வீடுகளில் புதுப்பிக்கும் போதும், கிணறு மற்றும் வேறு நீர் ஆதாரங்களுக்காக பூமியை தோண்டும் போதும் முன்னோர்கள் புதைத்து வைத்திருந்த பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இதே போல் இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டில் பூமிக்கடியில் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் அவை இப்போது கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
தெற்கு இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் ராபர்ட் ஃபூக்ஸ் மற்றும் பெட்டி தம்பதியினர் அவர்களது 400 ஆண்டுகள் பழமையான வீட்டை புதுப்பிக்க எண்ணியுள்ளனர்.
பிரிட்டிஷ் அருங்காட்சியகம்
அதற்காக வீட்டின் சமயலறையை தோண்டும் பொழுது அவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக ஏதோ ஒரு பொருள் கீழே தட்டுப்பட்டுள்ள நிலையில் அதை உடைத்து பார்த்த ராபர்ட் ஃபூக்ஸ் ஆச்சரியமடைந்துள்ளார்.
காரணம் எலிசபெத்(1), சார்லஸ்(1), பிலிப் மற்றும் மேரி உட்பட்ட பல்வேறு ஆட்சிக்கால தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் அதனுள் இருந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாணயங்களை கண்டுபிடித்தவுடன் ஃபூக்ஸ் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் அந்த கலைப்பொருட்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு சுத்தம் செய்து அடையாளம் காண அனுப்பி வைத்துள்ளனர்.
நாணயங்களின் மதிப்பு
இது குறித்து ஃபூக்ஸின் மனைவி தெரிவிக்கையில் “என் கணவர் வீட்டை புதுப்பிக்க நினைத்து வீட்டின் சமையலறையை ஆழப்படுத்திய போது அப்பொழுது இந்த நாணயங்கள் கிடைத்தன.
அத்தோடு இன்னும் ஏதாவது கிடைக்குமா என்ற ஆவலில் அவர் இன்னும் அவ்விடத்தைவிட்டு வரவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாணயங்களின் மதிப்பு 65,000 டொலர் (இன்றைய திகதியில் இந்திய ரூபாயில் சுமார் 62 லட்சம்) என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |