குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்
வறுமையை ஒழிப்பதற்காக ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக “பிரஜா சக்தி” (Praja shakthi) வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனை தெரிவித்துள்ளார்.
வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள்
தற்போது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 06 பேரில் ஒருவர் பல்பரிமாண வறுமைக்குட்பட்டு இருப்பதுடன், குறித்த சனத்தொகையில் 95.3% வீதமானவர்கள் கிராமிய மற்றும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.
இலங்கையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ள வறுமையொழிப்பு வேலைத்திட்டங்களின் இறுதிப் பெறுபேறுகள் பற்றி எந்தவொரு தரப்பினரும் திருப்தியடையவில்லை என்பதைக் கருத்துக்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக வறுமையொழிப்பு வேலைத்திட்டங்கள் மூலம் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையும், அதற்காக செலவிடப்பட்டுள்ள நிதியும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
பாதகமான விளைவு
2000 ஆம் ஆண்டில் 1.10 மில்லியன் பயனாளிகளும், 2010 ஆம் ஆண்டில் 1.57 மில்லியன் பயனாளிகளாக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 1.79 மில்லியன் பயனாளிகள் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலைமையை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயன்முறைக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதனால், இடர்களுக்கு உள்ளாகக்கூடிய குழுவினரை மாத்திரம் முறைசார்ந்த சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதற்கும், ஏனையவர்களை பொருளாதாரச் செயன்முறையில் முனைப்பான பங்காளர்களாக மாற்றுவதற்கும் படிப்படியாக முறையாகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்