தடையை நீக்கியது அமெரிக்கா! இந்திய மக்களுக்கு வெளிவந்துள்ள மகிழ்ச்சியான தகவல்
இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்கா வருவதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து டில்லி விமான நிலையத்தில் இருந்து ஏராளமானோர் நேற்று அமெரிக்கா புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதும் அனைத்து நாடுகளிலும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் பயணியர் அமெரிக்கா வர அந்நாட்டு அரசு தடை விதித்தது.
தொற்று பரவல் சற்று குறைந்த பின் சில குறிப்பிட்ட விசா வைத்துள்ளோர் மட்டும் அமெரிக்கா வர அனுமதிக்கப்பட்டனர்..
இந்நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணியர் நவ. 8 முதல் அமெரிக்கா வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.விமான பயணம் மேற்கொள்வதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை பயணியர் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டில்லியில் இருந்து நேற்று அதிகாலை புறப்பட்ட விமானங்களில் அமெரிக்கா செல்ல இந்தியாவைச் சேர்ந்த பயணியர் ஏராளமாக குவிந்தனர். இவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.