கோட்டாபய அரசு முடிவை மாற்றாவிட்டால் ? இருளில் மூழ்கவுள்ள இலங்கை - விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்பட்ட யுகதனவி அனல்மின் நிலைய ஒப்பந்தத்தை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு (புதன்கிழமை) முன்னர் அரசாங்கம் மீளப்பெறாவிடின் நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (27) எச்சரிக்கை விடுத்துள்ளது.
3ம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்த திகதி அறிவிக்கப்படும் என்றும், ஒப்பந்தம் வாபஸ் பெறும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவரும் பணிக்கு திரும்ப மாட்டார்கள் என்றும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால்( Ranjan Jayalal) தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் தேசிய ஊழியர் சங்கம், இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் CEB Sri Lanka Nidahas Sevaka Sangamaya ஆகியவை நேற்று (27) சமுக மற்றும் சமாதான நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தன.
அங்கு கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால்,
இது முழு நாட்டையும் இருளில் மூழ்கடிக்கும் வேலைநிறுத்தமாக இருக்கும் என்றும், அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வேலைத் தளங்களையும் ஒப்படைத்து, முடிந்தால் அவற்றைப் பராமரிக்க இராணுவத்தினரையோ அல்லது அரசாங்க உதவியாளர்களையோ களமிறக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாகவும் தெரிவித்தார்.
மதத்தலைவர்கள் மின்சார ஊழியர்களுக்கு அறிக்கை விடுவதால் பயனில்லை எனவும், மின்வெட்டு காரணமாக ஊடக நிறுவனங்கள் கூட முடங்கும் எனவும், அதற்குள் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வேலைநிறுத்தம் தான் தனது கடைசி முயற்சி என்றும், போதிய அளவு மெழுகுவர்த்திகளை வாங்குமாறு மக்களிடம் கூற வேண்டும், இல்லையெனில் எரிவாயு, பால்மா மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
யுகதனவி உடன்படிக்கை மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக நாளை (29ஆம் திகதி) பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தமே அதன் இறுதி நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை மீளப்பெறுமாறு கோரி எதிர்வரும் 3ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மின்சார ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் மற்றும் துறைமுக ஊழியர்களும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. நாடளாவிய ரீதியில் கையொப்பமிடப்பட்ட இந்த மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அரச தலைவர் செயலகத்திற்கு மாபெரும் பாதயாத்திரையாக அரச தலைவரிடம் கையளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் மின் உற்பத்தி நிலையங்களில் அத்தியாவசிய பணியாளர்கள் மாத்திரம் பணியமர்த்தப்படுவதோடு ஏனைய அனைவரும் கொழும்புக்கு வருவார்கள் எனவும் மின்சாரம் தடைப்பட்டால் மின்சார விநியோகத்தை மீளமைப்பது கடினமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாளை (29) முற்பகல் 11.30 மணிக்கு மனுவொன்று கைச்சாத்திடப்பட்டு மதியம் 12.00 மணிக்கு தொழிற்சங்கத்தின் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் 18 இடங்களில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், காலி, தங்காலை, இரத்தினபுரி, கிரிபத்கொட, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் லக்ஷபான இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகங்கள், கண்டி மற்றும் கொழும்பு நகர அலுவலகங்கள், தெஹிவளை மற்றும் எத்துல்கோட்டே வலய அலுவலகங்கள் மற்றும் சபுகஸ்கந்த, களனிதிஸ்ஸ, லக்விஜய ஆகிய இடங்களுக்கு முன்பாக நடைபெறவுள்ளது.
அரசாங்கத்துடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.