அப்படி ஒரு எண்ணம் கோட்டாபயவுக்கு இல்லை - வெளிவந்தது அறிவிப்பு
அமைதி வழியில் நடைபெறும் போராட்டங்களை பலத்தை பயன்படுத்தி அடக்கும் எண்ணம் அரச தலைவருக்கு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது இணை அமைச்சரவைப் பேச்சாளரான நாலக கொடஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மூன்றாம் தரப்பினரால் கையாளப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அமைதியான பொதுப் போராட்டங்களை தனிப்பட்ட இலாபங்களுக்காகப் பயன்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையின் கண் கட்டப்பட்டமை தொடர்பில் வெளிநாட்டு நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலையை அகற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக ரீதியில் அரசாங்கம் இதுவரை போராட்டங்களை நடத்த அனுமதித்துள்ளது.
பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வரையில் போராட்டங்கள் தடைப்படாது என்பது அரச தலைவரின் கருத்து என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
