கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?
இலங்கை மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என மருத்துவர் பிரசன்ன குணசேன எடுத்த தீர்மானத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டாபயவின் இந்த கோரிக்கை காரணமாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் ஏற்படுத்திக்கொண்ட கருத்து முரண்பாடு காரணமாக அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து பிரசன்ன குணசேன விலகி தீர்மானித்துள்ளதாக இதற்கு முன்னர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த பிரச்சினையில் நேற்றைய தினம் வரை அமைச்சர் ரம்புக்வெல்லவின் தரப்பு வெற்றி பெற்றிருந்த போதிலும் அரச தலைவர், இந்த பிரச்சினையில் தலையிட்டுள்ளதை அடுத்து நிலைமை மாறியுள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சர் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
