கோட்டாபயவின் நேர்காணலில் அம்பலப்படுத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் திட்ட பின்னணி!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பிள்ளையான் ஒரு கருவி என்றும், அவரைக் கைது செய்து விசாரிக்கும் அரசாங்கம் தாக்குதலின் கர்த்தா எனக் கூறப்படும் கோட்டாபய ராஜபக்சவை ஏன் கைது செய்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சர்வதேச செய்தி சேவைக்கு முன்னாள் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய நேர்காணலில் முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இராணுவம் முகாம்கள்
“இங்குள்ள ஜே.வி.பி. தோழர்கள் ஒரு போராளிகள். வரலாறு உங்கள் 50 வருடங்களுக்கு பின்னர் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது.
இதே போன்று தமது மண்ணில் போராடியவர்கள் மாவீரர்களாக துயிலும் இல்லங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த துயிலும் இல்லங்களுக்கு மேலால் இராணுவம் முகாம்கள் அமைத்து தமது சப்பாத்து கால்களுடன் நடந்து திரிகின்றனர்.
இவ்வாறான நிலையில் எப்படி சகோதரத்துவம் வரும்? உங்களுக்கும் எங்களுக்குமான உறவு எப்படி நீடிக்கும்? நீங்களும் நாங்களும் இந்த நாட்டு பிரஜைகளாக எவ்வாறு ஒன்றாக கைகோர்க்க முடியும்? தயவு செய்து சிந்தியுங்கள்.
நாங்கள் எதற்கும் புறம்பானவர்கள் அல்ல. யாரையும் தள்ளி வைத்து பார்க்கவில்லை. ஒற்றுமையை விரும்புகின்றோம். ஆனால் நாங்கள் நாங்களாக, தமிழர்கள் ஒரு தேசிய இனமாக, எங்களுக்கே உரித்தான இறையாண்மையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கிலுள்ள எமது பூர்வீக மண்ணில் வாழ்கின்ற உரிமையோடு இருப்பதற்கான உத்தரவாதத்தையே நாம் கேட்கின்றோம்.
இந்த உத்தரவாதம் கிடைக்காத வரைக்கும் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, ஒற்றுமை எவ்வாறு கிடைக்கும்? பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து சிறையில் வைத்துள்ளீர்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
அவர் குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல.
ஆனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மையமாக வைத்து அவர் விசாரிக்கப்படுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்தது 2019.05.21ஆம் திகதி அதேமாதம் 27ஆம் திகதி முன்னர் இந்த நாட்டில் பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ச சர்வதேச செய்தி சேவைக்கு ''இஸ்லாம் மதத்தினால் இந்த மண்ணில் எவ்வாறு தீமை நடக்கபோகின்றது, இஸ்லாம் இந்த நாட்டை எவ்வாறு அழிக்கப்போகின்றது. இதற்கு பின்னால் யார் இருந்தார்கள்'' என்பதனை சொல்கின்றார்.
ஆகவே பிள்ளையான் ஒரு கருவி மட்டுமே. கர்த்தாக்களான கோட்டாபய ராஜபக்ச ஏன் இந்த நாட்டில் இன்னும் விசாரிக்கப்படவில்லை?
2019-05-27ஆம் திகதி சர்வதேச செய்தி சேவைக்கு கோட்டாபய ராஜபக்ச வழங்கிய நேர்காணலை நான் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.
வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களின் அபிவிருத்திக்கான பிரதேசம். ஆனால் அபிவிருத்தி செய்ய நீங்கள் பின்னடிக்கின்றீர்கள். தமிழர்கள் அபிவிருத்தியில் முன்னுக்கு வந்துவிடுவார்கள் எனப் பயப்படுகின்றீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
