நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டாபய..! பல உண்மைகளை வெளியிட்ட மகிந்த
கோட்டாபய ராஜபக்ச செய்ய வேண்டியதை முடித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை.
முன்னாள் அதிபரும் தனது சகோதரருமான கோட்டபாய ராஜபக்ச குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, " நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ச என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை.
எனினும், அவர் முடிவு செய்துவிட்டே, ‘நான் போகிறேன்’ என என்னிடம் கூறினார். நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை.
கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் மே மாதம் வரை நான் பிரதமராக இருந்தேன். போகலாமா என்று அவர் என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன் " என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நெருக்கடிக்கு கோட்டாபய மாத்திரம் பொறுப்பல்ல
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்கு கோட்டாபய ராஜபக்ச பொறுப்பல்ல. இதற்கு நான் மற்றும் முந்தைய அரசாங்கங்கள் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ச தான் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார். எனவே, அவரைக் குறை கூற முடியாது. அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறந்த நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். அதிபராக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார்.
முன்பெல்லாம் அவர் ஒரு கடும்போக்குவாதியாக இருந்தார். அதிபரான பின்னர் அவர் மென்மையாக மாறினார். அவர் அதனை செய்திருக்க கூடாது, ஆனால் அவர் அரசியல்வாதி அல்ல. எவ்வாறாயினும், அவர் முன் இருந்த பணியை சரியாக முடித்திருக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.