இனியும் இடமளிக்க முடியாது! கொள்கை விளக்க உரையில் கோட்டாபய அதிரடி அறிவிப்பு(நேரலை)
இரண்டாம் இணைப்பு
தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அர தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டதாகவும், இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் லாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் கோட்டாபய கோரினார்.
வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து, அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் இன்று சாதாரண வாழ்கையை மீளப்பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரையை கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டின் தலைவராக அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூறும் ஒருவராக இருக்கிறேன். நாடு பல மாதங்களாக மூடப்பட்டிருந்தததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வருமானம், சுற்றுலாத்துறை, ஆடை தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாரிய செலவீனங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது.
ஆனாலும், இன்று சாதாரண வாழ்கையை மீளப்பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்ததை அடுத்து, 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை அரசதலைவர் கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி முடிவுக்கு கொண்டு வந்தார்.
அரசியலமைப்பின் 70 (1) சரத்துக்கு அமைய, அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நாடாளுமன்ற கூட்டத் தொடரை கோட்டாபய ராஜபக்ச முடிவுக்கு கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தின் 2வது கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 18ம் திகதி வரை கோட்டாபயவினால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (2022.01.18) காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.