புதிய அரசியல் கட்சி: மீண்டும் அரசியலில் குதிக்கிறார் கோட்டாபய
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான ஆயத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டங்களால் பதவி விலகினார். இதனையடுத்து அவர் அரசியலில் ஈடுபடுவதில் மௌனத்தை கடைப்பிடித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்றி வலுப்படுத்த கோட்டாபய முனைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
புதிய அரசியல் கட்சி
நேற்றைய தினம் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவித்த அவரது நெருங்கிய உதவியாளரும் ஊடக உரிமையாளருமான ஒருவரால் தற்போது புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதற்குள் தனது பிம்பத்தை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.
மக்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் முன்னாள் அதிபர் என்ற வகையில் அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் பெற்ற கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் தலைமைத்துவம் ஏற்கப்பட்ட மௌபிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் வியத்மக அமைப்பு
திலித் ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் மௌபிம ஜனதா கட்சி தனது அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கட்சி இப்போது புதிய உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பு போன்ற கட்டமைப்பை உருவாக்கி தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சனல் 4 ஊடகம்
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளியில் பிரதான சூத்திரதாரிகளின் பெயரில் கோட்டாபயவின் பெயரும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS