மக்களின் அபிலாஷைகளை பெற கோட்டாபய எடுக்கவுள்ள நடவடிக்கை
அரசியலமைப்பிற்கு அமைய தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவதாகவும், அமைச்சரவையில் மேலதிக உறுப்பினர்களை இணைத்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக மொனராகலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டும். அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வதே கூட்டுப் பொறுப்பாகும்.
குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
கொவிட் தொற்றுக் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றிச் சிந்திக்காமல் அடுத்த மூன்று வருடங்களில் வாக்குறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை அமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகின்றனர்.
எவ்வாறாயினும் அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை.
நாட்டிற்கான வலுவான அரச சேவையை ஏற்படுத்துவதற்காக எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதோடு, கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து, மக்களின் அபிலாஷைகளை துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக” அரச தலைவர் உறுதியளித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)