முடிந்தால் நீக்கி காட்டுங்கள் -கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட சவால்
அரச தலைவர் கோட்டாபய (Gotabaya Rajapaksa)தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும், எந்த நேரத்திலும் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியும் என்பது அரச தலைவருக்கு தெரியும் எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
யுகதனவி உடன்படிக்கையின் அபாயத்தை அறிந்து நீதிமன்றத்திற்கும் நாட்டிற்கும் உண்மையை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் இந்த சம்பவம் இல்லாவிட்டாலும் அரச தலைவர் எந்த நேரத்திலும் தன்னை எந்த அமைச்சுப் பதவியில் இருந்தும் நீக்க முடியும் என்பதை நன்கு அறிவதாகவும் அமைச்சர் கூறினார்.
யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது என அரச தலைவர் கூறியது அவரது கருத்து என தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, இந்த வெளிப்படுத்தலில் தவறில்லை என்பது தனது மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும் எனவும் தெரிவித்தார்.
தாம் உட்பட மூன்று அமைச்சர்களும் குற்றமற்றவர்கள் என்ற காரணத்தினால் ராஜினாமா செய்தால் அது தாங்கள் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும் செயலாகும் எனவும், தான் செய்தது சரியென இன்னமும் கூறிவருவதாகவும் அவர் கூறினார்.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எரிசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில இன்று சிங்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara)ஆகியோர் யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை தவறானது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின்போது (27) தெரிவித்துள்ளார்.