கண்துடைப்பு செய்கிறார் அரச தலைவர் கோட்டாபய - அருட்தந்தை ஜோசப் மேரி குற்றச்சாட்டு
வெளிநாட்டிற்குச் சென்று சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது வெறும் கண்துடைப்பு மாத்திரமே, இதை அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அருட்தந்தை யோசப் மேரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
“இதற்கு முன் இருந்த அரசாங்கமும் ஐ.நாவில் போய் கூறியிருந்தார்கள். மனித உரிமை மீறப்பட்டுள்ள வேளையில் நாங்கள் ஆவண செய்வோம் என்று, ஆனால் அதுவும் கிடப்பில் கிடந்ததுடன் இந்த அரசை குற்றம்சாட்டியும் இருந்தார்கள்.
எமது மக்களை விலைபேசி விட்டார்கள் என்றும் கதைத்துள்ளார்கள். இதே பாணியில் எமது அரச தலைவரும் அமெரிக்காவில் கூறியது முன்னைய அரசைப் போன்று வெறுமனே வாய்ச் சொல்லே தவிர செயல்முறையில் நடக்குமா என்பது கேள்விகுறியாகத் தான் இருக்கின்றது.
ஆகவே கண்துடைப்புக்காக இதை செய்கின்றார்களா? அல்லது மனதார உணர்ந்து செயற்படுகின்றார்களா என்று அவர்களுக்குத் தான் தெரியும்.
ஆனால் வெளிநாடுகளில் இவ்வாறு பேசிவிட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து அவற்றை மறத்து விடுகின்றனர். இதைத் தான் நான் கடந்த காலங்களில் இருந்து பார்த்து வருகின்றேன்.
அரச தலைவர் கூறிய வார்த்தையை செயல்படுத்துவாராக இருந்தால் அவர் ஒரு பெயர் போன தலைவராவார்” எனத் தெரிவித்துள்ளார்.