அரச தலைவர் என்ற மிதப்பில் கோட்டாபய உள்ளார்! மக்கள் சாபமிடுகின்றனர் - சாடியது எதிர்க்கட்சி
நாம் விளையாடுவது எமது பிள்ளைகளின் எதிர்காலத்துடன், இன்று அனைவரும் அரச தலைவர் என்ற மிதப்பில் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) தெரிவித்துள்ளார்.
அரச தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் மக்கள் சாபமிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இம்முறை வரவு செலவு திட்டத்தில் சாதாரண மக்கள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அவர்களுக்கே வறுமை, ஏழ்மை என்னவென்பது அதிகமாக தெரியும்.
பசில் இந்த வரவு செலவு திட்டத்தை அமெரிக்காவில் இருந்து உருவாக்கினாரா என தெரியவில்லை.
ஆனால் இந்த அரசாங்கத்திற்கு கிடைத்த 69 இலட்சம் வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகள் அப்பாவி மக்களின் வாக்குகள் என்பதை பசில் ராஜபக்ச நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இருக்கின்றவரிடம் பெற்று இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டுமே தவிர இல்லாதவனிடம் பிடுங்கி கம்பனிக்காரர்களுக்கு வழங்கும் திட்டமே இதுவாகும்.
ஆகவே நிதி அமைச்சரின் வரவு செலவு திட்டமும் தோல்வி என்றே கூற வேண்டும். எதிர்க்கட்சியினர் அண்மையில் வெற்றிகரமான ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்து காட்டியுள்ளனர்.
அரசாங்கம் செய்த சதித்திட்டமே எதிர்கட்சிகளின் பேரணி பெற்றிபெற காரணம். அரசாங்கம் தவறாக செயற்பட்டுக்கொண்டுள்ளது, இது தொடர்ந்தால் வெகு விரைவில் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் என்பதை எதிர்க்கட்சி சிறப்பாக எடுத்துக்கூறியுள்ளது.
நாம் விளையாடுவது எமது பிள்ளைகளின் எதிர்காலத்துடன், இன்று அனைவரும் அரச தலைவர் என்ற மிதப்பில் உள்ளனர்.
இதே முறையில் அடுத்துவரும் நபரும் ஒரு பைத்தியக்காரன் ஆனால், அவரும் குடும்பத்தை வைத்து அரசியல் செய்தால் என்ன நடக்கும்.
ஆகவே இவ்வளவு கால அரசியலில் அடுத்த சந்ததிக்கான ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.
இனியும் நாட்டை நாசமாக்கிக்கொண்டு இருந்தால், இன்று மக்களின் வேண்டுதல் உங்களுக்கு இடிவிழ வேண்டும் என்பது தான்.
மக்கள் இரண்டு கைகளை ஏந்தி இடி விழவேண்டும் என கேட்கின்றனர். அந்த சாபத்தை மனதில் வைத்துக்கொண்டு நல்லதை செய்யுங்கள் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.