நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கியுள்ள உறுதிமொழி
அண்டைய நாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்ளும் போது நாட்டின் சுயாதிபத்தியத்திற்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்தார்.
களுத்துறை, வளல்லாவிட்ட, யட்டபாத்த கிராமத்தில் வைத்து உரையாற்றிய போது இதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் வளங்கள் வேறு நாடுகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் இதன்போது ஜனாதிபதி உறுதியளித்தார்.
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் அதன் நிர்வாகம் மற்றும் 51 வீத பங்குகளின் உரிமை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தாகும்.
ஏனைய 49 வீத பங்குகளுக்கு முதலீடு செய்ய இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்வருமென அவர் குறிப்பிட்டார். மக்கள் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் தன்னை அதிகாரத்திற்கு கொண்டுவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்வரும் நான்கு வருட காலப்பகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.