ஸ்ரீலங்காவின் முக்கிய கட்சிகளுக்குள் விரிசல்- பலத்தை நிரூபிப்பதற்கான திரைமறைவு நகர்வுகள்!
ஸ்ரீலங்கா அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெறுவதற்காக பௌத்த மக்களின் பெருமதிப்பிற்குரிய மகாநாயக்க தேரர்களுடன் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதற்காக முக்கிய உறுப்பினர்கள் சிலருடன் மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஸ்ரீலங்காவில் இந்த வருடத்துக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு உத்தேசித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதற்கான நகர்வுகளை தற்போது திரைமறைவில் முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதாமாளிகைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெறவுள்ளார்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட அரசியல் வேலைத்திட்டங்களிலும் பங்கேற்கவுள்ளதோடு நாளைய தினம் மாத்தளை மாவட்டத்திலும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் பங்காளியாக அங்கம் வகித்தாலும் சுதந்திரக்கட்சிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை.
இதனால் அக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதுடன் மொட்டு அரசால் முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்களுக்கும் சுதந்திரக்கட்சி போர்க்கொடி தூக்கியிருந்தது.
இதனால் இரு தரப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மாகாணசபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டு, பலத்தைக்காட்ட முற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.