பாரிய எதிர்பார்ப்புடன் உருவாக்கிய அரசாங்கம் மீதான மக்கள் நம்பிக்கை சரிந்தது - சுதந்திரக்கட்சி கடும் குற்றச்சாட்டு
பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனால் இலஞ்சம் ஊழல் இன்று எங்கும் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ராஜோபவனராமய விகாராதிபதியை சந்தித்து ஆசிபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு இன்று முன்னுதாரணமான தலைவர் தேவை. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது.
எங்கு பார்த்தாலும் ஊழல் மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வருகிறது. பாரிய எதிர்பார்ப்புடன் அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனால் இலஞ்சம், ஊழல் இன்று எங்கும் அதிகரித்துள்ளது.
தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, பீ சிஆர் மோசடி என வரிசை நீண்டு செல்கிறது. இதனால் மக்களின் நம்பிக்கை சரிந்து கொண்டு செல்கிறது. இதனை மீள கட்டியெழுப்ப வேண்டும்.
ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படவில்லை என்பது மகிழ்ச்சி. எவரையும் தாக்கவில்லை, கொல்லவில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.