“உடனடியாக ஆரம்பியுங்கள்” ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு
இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக ஆரம்பிக்குமாறு அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான இன்றைய கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பிராந்திய அபிவிருத்தி திட்டத்தில் ஆளுநர்களும் மாவட்ட செயலாளர்களும் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும், அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பு இந்த இரு குழுக்களிடமே உள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
வளர்ச்சியின் பலன்களை கிராமப்புற மக்களுக்கு விரைவில் கொடுக்க அரசாங்கம் நம்புகின்றது.
மேலும், கிராமப்புறங்களில் காடு வளர்ப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.