சர்வதேச அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் படுதோல்வியடைந்த கோட்டாபய!
சர்வதேச அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஸ்ரீலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச படுதோல்வி அடைந்துவிட்டதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஐ.நா.வில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டதிலிருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவால் நாட்டை பாதுகாக்க முடியாது என்பது தெளிவாகிறது.
அத்தோடு முறையற்ற வெளிநாட்டு கொள்கைகளுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதில் கோட்டாபய தோல்வியடைந்துள்ளார்.
இம்முறை ஸ்ரீலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணையின் யுத்தம் தொடர்பான காரணிகளை விட தற்போதைய ஆட்சியில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் இராணுவ மயமாக்கல் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்தன்மையின் பலவீனம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலேயே அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பழிவாங்கலுக்கு உட்படுகின்றமை முஸ்லிம்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களும் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற நீதித்துறையில் அரசியல் தலையீடு உள்ளிட்ட விடயங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாகவே ஸ்ரீலங்கா ஜெனிவாவில் தோல்வியடைந்தது. சர்வாதிகாரத்தை இலக்காகக் கொண்டு செயற்படும் இந்த அரசாங்கத்தினால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சூழலில் ஐ.நா.வில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்திருந்தன.
ஆனால் இம்முறை 11 நாடுகள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் முதலாவது வாக்கெடுப்பிலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரது சர்வாதிகார அரசியல் கொள்கையே இதற்கு காரணமாகும்.
அத்தோடு ஆதரவாக வாக்களித்த 11 நாடுகளும் ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வாக்களிக்கவில்லை. அவற்றில் பெரும்பாலானவை பிரித்தானியாவுக்கு எதிரான நாடுகளாகும். அதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.