பிள்ளையானை வைத்து அரசின் காய்நகர்த்தல் படுதோல்வி : உதய கம்மன்பில அறிவிப்பு
பிள்ளையானை(pillayan) கைது செய்து, அவர் வழங்கிய வாக்குமூலம் என்ற அடிப்படையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகளை வாக்குறுதியளிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் அம்பலப்படுத்தத் தவறியதால் அரசாங்கம் சிக்கலில் சிக்கியுள்ளது.
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், பிள்ளையானின் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில(udaya gamanpila) தெரிவித்தார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசை அச்சுறுத்திய கர்தினால்
இந்த நாட்டு மக்களை ஏமாற்ற அநுர அரசாங்கம் மேற்கொண்ட மற்றொரு முயற்சியை நாம் முறியடிக்க முடிந்தது. அரசாங்கத்தின் ஆறு மாத ஆட்சிக் காலம் நிறைவடைந்தவுடன் கர்தினால் அரசாங்கத்தை அச்சுறுத்தினார். ஈஸ்டர் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவான ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள், ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டவரை அரசாங்கம் அம்பலப்படுத்தத் தவறினால், கத்தோலிக்க மக்களுடன் சேர்ந்து வீதிகளில் இறங்குவோம் என்று அவர் கூறினார்.

பீதியடைந்த ஜனாதிபதி அநுர
இதனால் பீதியடைந்த ஜனாதிபதி, மார்ச் 30 ஆம் திகதி தேர்தல் மேடையில் , ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை அம்பலப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி ஆனால் அப்படியொரு வெளிப்படுத்தல் ஜனாதிபதியால் செய்யப்படவில்லை. அந்த அடிப்படையில் மற்றுமொரு உறுதிமொழியை அரசாங்கம் மீறியுள்ளது.

காவல்துறை கைதுக்கான காரணத்தைக் கூற மறுத்து, அரசியலமைப்பை மீறியது. இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்காக தான் பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் தொழில்துறை அமைச்சர், இது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பற்றியது அல்ல, மாறாக ஒரு பேராசிரியர் காணாமல் போனது பற்றியது என்று கூறுகிறார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கியமான தகவல்களை பிள்ளையான் வெளிப்படுத்துவதாக பொது பாதுகாப்புதுறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிள்ளையானை சந்திக்க அனுமதி மறுத்தது ஏன்..!
பிள்ளையானை கைது செய்து, அவர் வழங்கிய வாக்குமூலம் என்ற அடிப்படையில் தமது மனதில் உள்ள பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தவே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதனால்தான் பிள்ளையானை சந்திப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படவில்லை. சந்தேக நபர் ஒருவருக்குள்ள உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. பிள்ளையானுக்கு சட்ட உதவி பெற வாய்ப்பு வழங்கப்படவில்லை.பிள்ளையானின் கைது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்புபடுத்தப்பட்டது.

இதனால்தான் சட்ட துருப்பை பயன்படுத்தி பிள்ளையானை, சந்தித்து அரசாங்கத்தின் திட்டத்தை முறியடித்தோம். பிரதான சூத்திரதாரியை உருவாக்கும் முயற்சியை இல்லாது செய்ய முடிந்தது. சஹ்ரான்தான் பிரதான சூத்திரதாரியென அமெரிக்காவின் எப்பிஐகூட கூறியுள்ளது. என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்