நாட்டில் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் அரசாங்கம் - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
நாட்டை இந்த அரசாங்கத்துக்கு ஒப்படைக்கும்போது நாட்டின் அந்நிய செலாவணி 7.2டொலர் பில்லியன் மீதப்படுத்தி இருந்தோம் ஆனால் தற்போது அந்நிய செலாவணி 2.2 டொலர் பில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா (Niroshan Perera) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன்னும் சில மாதங்களில் 7டொலர் பில்லியன் வெளிநாட்டு கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது. எமது நிதி பிரச்சினை காரணமாக வெளிநாடுகள் எமக்கு கடன் வழங்குமா என்ற சந்தேகம் எழுகின்றது. இந்நிலையில் பங்களாதேஷி்டம் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
டொலர் பிரச்சினை எமது வங்கி கட்டமைப்பு வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு இன்று நாளுக்கு நாள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. ஈஸ்டர் தாக்குதலின் சாபமே இதற்கு காரணமாகும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காதவரை இந்த அரசாங்கத்துக்கு எதிர்காலம் இல்லை என கூறியுள்ளார்.
அரசாங்கம் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக இன்று அருட்தந்தை சிறில் காமினியின் பின்னால் துரத்திக்கொண்டிருக்கின்றது. அத்துடன் புதிய பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருளுக்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக மக்கள் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ள காலையில் வரிசையில் நின்று வருகின்றனர்.
அதேபோன்று யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு மின்சார சபை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின்சார பிரச்சினை நாட்டில் பொருளாதார பிரச்சினைக்கு வழி ஏற்படுத்தி இருக்கின்றது.
மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும், நிவாரணம் கிடைக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். மக்களின் எந்த பிரச்சினைக்கும் இந்த வரவு செலவு திட்டத்தில் தீர்வு இல்லை. என தெரிவித்துள்ளார்.