எனது பேச்சை ஒருபோதும் கேட்காத அரசு -மைத்திரிக்கு ஏற்பட்ட கவலை
எனது ஆட்சியில் விவசாயிகளுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வர அனுமதிக்கப்படாது. விவசாயிகள் பற்றி இந்த அரசிடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசு என் பேச்சைக் கேட்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகமுன நகர மத்தி விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி மொரகஹகந்த மற்றும் எலஹெர கமநல இயக்கத்தின் 41 விவசாய அமைப்புக்கள் கடந்த 24 ஆம் திகதி தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து இன்று எட்டு நாட்கள் நிறைவடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாயிகளை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். விவசாயிகளின் உரப்பிரச்சினை குறித்து விவசாய அமைச்சரிடம் பலமுறை விவாதித்தேன். ஆனால் நல்ல பதில் வரவில்லை. சில இராஜாங்க அமைச்சர்கள் என்னை அவதூறாகப் பேசுகின்றனர். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பொலனறுவைக்கு செல்ல வழியில்லை என்றேன். இந்த அடிப்படையில்தான் அந்த இராஜாங்க அமைச்சர்கள் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். இது தொடர்பில் எனக்கு கவலை இல்லை.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்க மாட்டோம் எனவும், இயற்கை உரங்களை பயன்படுத்தி முறையான முறையில் நெல் பயிரிட விவசாயிகளுக்கு கற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
உலகில் வேறு எந்த நாடும் 100% கரிம உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை என்றும் அவுஸ்திரேலியாவில் கூட 50% கரிம உரத்தையே பயிரிடுவதாகவும் சிறிசேன தெரிவித்தார்.
1980களில் இருந்து தான் விவசாயிகளுக்காக வாதாடி வருவதாகவும், விவசாயிகள் விஷம் அருந்திய போது விவசாயிகளின் உயிரைக் காக்க முதன்முறையாக பொலனறுவையில் சவப்பெட்டிகளை ஏந்தி பிரசாரம் செய்ததாகவும் சிறிசேன கூறினார்.