லசந்த விக்கிரமதுங்க விடயத்தில் இரட்டை நிலைப்பாடு: கேள்வியெழுப்பும் ரவி கருணாநாயக்க!
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க விடயத்தில் அரசாங்கம் ஏன் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று (08.01.2026) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரட்டை நிலைப்பாடு
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “லசந்த விக்ரமதுங்க உயிரிழந்து இன்றுடன் 17 வருடங்கள். பிரதமரிடம் கேள்வியொன்றை எழுப்புவது தொடர்பில் நான் அலுவலகத்துக்கு அறிவித்திருந்தேன்.

குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என மறுத்து விட்டனர்.
எனினும், இதே நாடாளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதிலளிக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் பதிலளிக்கப்படுகிறது. மருந்துகள் தொடர்பில் பதில் வழங்கப்படுகிறது. அவற்றுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லசந்த விக்ரமதுங்க கொலைக்கு இன்று 17 வருடங்கள் ஆகின்ற போதிலும் ஏன் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றீர்கள். ” என கேள்வியெழுப்பினார்.
பிமல் ரத்நாயக்க
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, “லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

அதேபோல், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மூலமும் பதில் வழங்கப்பட்டது. அரசாங்கம் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவோம்.
லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் கடந்த காலங்களில் நாட்டில் ஆட்சியமைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். ஆகவே, தவறிழைத்தவர்கள் மீது நிச்சயமாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 24 நிமிடங்கள் முன்