அரச ஊழியர்களின் சம்பளம் விடயம்: ரணிலை புகழும் அமைச்சர்
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரச ஊழியருக்கும் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் குறைவின்றி வழங்கியமை பெரு வெற்றியாகும் என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அதற்காக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) வழங்கிய அறிவுரைகள் பக்கபலமாக அமைந்திருந்தாகவும் அசோக பிரியந்த (Ashoka Priyantha) குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் புதன்கிழமை (17.7.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ''கடந்த இரு வருடங்கள் மிகக் கஷ்டமாக அமைந்தது. நாம் கொரோனா, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியிருந்தது.
சம்பளமும், கொடுப்பனவுகளும் நிறுத்தப்படலாம் என்றும் சிலர் சிந்தித்தனர். அரசாங்க சேவை முடங்கிவிடும் என்றும் நினைத்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைய அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் (Dinesh Gunawardena) வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக அரச சேவையைப் பாதுகாக்க முடிந்தது.
நாட்டு மக்களின் பங்களிப்பு
இது மிகப்பெரிய வெற்றியாகும். அதற்கு அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் முழுமையான பங்களிப்பு கிடைத்திருந்தது என்பதையும் நினைவுகூற வேண்டும்.
தேர்தல் பற்றி இன்று பலர் பல இடங்களில் பேசினாலும் அதற்கு தகுந்த சூழலை உருவாக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அர்பணித்துள்ளது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |