அரசாங்கத்தின் வா்த்தமானியை, திரும்பப்பெறுங்கள்! ராஜாங்க அமைச்சர் கோரிக்கை
முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் சுமார் 5800 ஹெக்டேர் நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை, சுவீகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை திரும்பப்பெறவேண்டும் என்று அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சா் நிமல் லான்சா தொிவித்துள்ளாா்.
இந்த விடயத்தை மேலும் பிரச்சனைக்கு உள்ளாக்காது, குறித்த வா்த்தமானியை திரும்பப்பெறவேண்டும் என்று அவா் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தாா்.
புதிய வர்த்தமானிக்குப் பதிலாக 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 1447 ஹெக்டேயர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் நாடாளுமன்றத்தில் கோாிக்கை விடுத்தாா்.
இந்தநிலையில் முத்துராஜவெல சுற்றாடல் உணர்திறன் வலயமாக 1447 ஹெக்டேயர் காணிகளுக்கு மேலதிகமாக 4,400 ஹெக்டேயர் காணிகளை பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் மற்றுமொரு சிக்கலுக்குள் செல்வதாக தெரிவித்தார்.