தீர்வு கொடுக்கும் தருவாயில் அரசாங்கம் இல்லை - எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு
மக்களது பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்கக் கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara )தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (02) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் ஒரே நீதி, ஒரே சட்டம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கு நீதி இல்லை. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
எமது கட்சி கடந்து வந்த காலங்களில் பல ஜனநாயக ரீதியான தலைவர்களை உருவாக்கியது. மக்களுடைய ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும்.
தற்போது உள்ள சஜித் பிரேமதாச அவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைவராக உள்ளார். குறிப்பாக இளைஞர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராவார்.
தற்போதைய அரச தலைவரட கோட்பாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் எதிக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த நான்கு பேரையும் பார்க்கும் போது ஏனைய மூவரும் வயது முதிர்ந்தவர்கள். அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியவர்கள். அவர்கள் மூவருக்கும் அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்தவாராக இளமையானவராகவும், அரசியல் வாழ்க்கையில் சுத்தமானவராகவும் சஜித் பிரேமதாச இருக்கிறார்.
இந்த நாட்டில் அனைத்து மதங்களும் வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். 5 மதத்தவர்களும் சமனாக வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டியது எமது பொறுப்பு” என்றார்.