தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் திட்டமிட்ட சதி : கூட்டமைப்பின் எம்.பி பகிரங்கம்
சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீர்த்த ஒவ்வொரு போராளிகளை, தமிழ் தேசிய வீரர்களை, மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமையுண்டு. அதற்கு உங்களால் தடைபோட முடியாது. தடைபோடவும் கூடாது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராலிங்கம் (Vino Noharathalingam).
நேற்றையதினம் அடுத்த வருடத்திற்கான பாதீட்டின், இரண்டாம் மீதான வாசிப்பு 6ஆம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரத் தயாராயுள்ள நிலையிலே வடக்கு கிழக்கிலே உள்ள நீதிமன்றங்கள் அந்தந்த மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட பலருக்கும் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கக்கூடாது. ஒன்று கூடக்கூடாது என்ற தடை உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருக்கின்றன.
எங்களின் விடுதலைக்கு தங்களின் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் மாவீரர் வாரத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
எனவே தான் இலங்கையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க அரசு திட்டமிட்டு இவ்வாறான கொரோனா சுற்றறிக்கைகளைக் காட்டி தடை செய்கின்ற கேவலமான ஒரு ஆட்சியத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம்.
அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான் மக்கள் பங்கேற்ற நிலையில் அங்கு எந்த வித கொரோனா தொற்றுக்களும் ஏற்படவில்லை.
ஆனால் வடக்கு, கிழக்கில் எமது தியாகிகளுக்கு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த புறப்படுகின்ற வேளையிலே இவ்வாறான தடைகள் போடப்படுகின்றன” என்றார்.
அத்தோடு, தமிழர் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த அனைவரையும் நினைவுக்கூருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.