50000 புதிய வேலைவாய்ப்புகள் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் 5000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அதிகாரம், அரச சேவை மற்றும் தனியார் துறையினரின் உதவியுடன் இந்த சேவை மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிராமங்களை வலுப்படுத்தல்
சனச அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அமைச்சின் சகல ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாகவும், அதற்கான செயற்பாடுகளையும் தாம் முன்னெடுப்பதாகவும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
விவசாயம், மீன்பிடி, சுயதொழில், தொழில் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி, கைத்தொழில், கால்நடை, உற்பத்தி, காணி துறை, மனிதவள மேம்பாடு, மாற்று எரிசக்தி உள்ளிட்ட பல சுயதொழில் சேவைகள் மூலம் கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்காணிப்பு நடவடிக்கைகள்
இந்தத் திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் மக்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் கிடைக்கப்பெறுவதால் பிரச்சினையின்றி உரிய தொழில்களில் ஈடுபட முடியும் எனவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |