பன்னாட்டு நிறுவனங்களின் “கைப்பொம்மையாக” அரசாங்கம் - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நாட்டில் உள்ள மீனவ சமூகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மீனவ சமூகத்திற்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டது. இந்த நாட்டில் உள்ள மீனவ சமூகத்தின் உரிமைகளை அரசாங்கம் வெளிநாட்டு டொலர் தரகர்களிடம் ஒப்படைத்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் "கொவி ஹதகெஸ்ம" நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக அம்பலாங்கொட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
எமது நாட்டைச் சுற்றி 200 கடல் மைல்களுக்கு அப்பால் பிரத்தியேக பொருளாதார வலயம் (Exclusive economic zone) எமது நாட்டில் உள்ளது.
இது எமது நாட்டின் நிலப்பரப்பை விட எட்டு மடங்கு பெரியது எனவும் இவ்வாறான பாரிய கடல் வளம் இருக்கும் போது கடற்றொழில் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2% -1.3 வரையிலான அளவே உள்ளது.
நாட்டில் கிடைக்கின்ற மீன்களில் 20% க்கும் குறைவாகவே ஏற்றுமதிக்கு ஏற்ற தரத்தைக் கொண்டுள்ளதாகவும், அந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால், இந்த நாட்டின் மீன்பிடித் தொழிலில் மிகப்பெரிய புரட்சிகர மாற்றம் செய்யப்பட வேண்டும்.
அதை மாற்றுவதற்கு ஒரு நீண்ட கால தேசியக் கொள்கை தேவை என்றும் அது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாறாத ஒரு நிலையான திட்டமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தரமான மீன் நுகர்வில் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கும் அதேபோன்று ஏற்றுமதி மீன் வளமாக அதனை மேம்படுத்துவதும் அவசியம்.
இது தொடர்பாக நடைமுறைச் சாத்தியமான மற்றும் விடயம் சார்ந்த அறிவைக் கொண்ட ஒரு மீன்வள ஆய்வுக் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது.
மேலும் வேறு யாரையும் விட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி கடற்றொழிலாளர்களுக்கே நன்கு தெரியும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளவர்களை விட மீனவ சமுதாயத்துக்கே கடற்றொழில் பிரச்சினைகளைப் பற்றிய சிறந்த அனுபவங்கள் உள்ளன.
அவர்களின் அனுவங்களைக் கொண்ட ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கி தனது கடற்றொழில் கொள்கை வகுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







