மீண்டும் பொருளாதார நெருக்கடி! ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி
2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறிய அவர், இலங்கையின் கடன் பொறுப்புகள் முழுமையாக நிர்வகிக்கக்கூடிய அளவில் தான் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்தியுள்ளதாகவும், ,2026 ஆம் ஆண்டில் சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய வங்கி புள்ளிவிபரங்கள்
அதன்படி, 2027-ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் தொகை சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறையும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு மத்திய வங்கி வழங்கிய புள்ளிவிபரங்கள், இலங்கை தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பு நிலையை வலுப்படுத்திக் கொண்டே தனது கடனைத் தொடர்ந்து செலுத்த முடியும் என்பதை நிரூபிக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநியைலில், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், கடன் செலுத்துவதில் எவ்விதச் சிரமமும் இருக்காது என்று அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் பொருளாதார நெருக்கடி
மேலும், 2028-க்குப் பிறகு கடன் சுமைகளை எதிர்கொள்ள கையிருப்பை 15 பில்லியன் டொலராக உயர்த்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியது தவறான வழிகாட்டல் என்றும், அவர் நாட்டின் கடன் நிலவரம் குறித்து தவறான சித்திரத்தை அளிக்க முயல்வதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டவர் அனுப்பும் பணம், ஏற்றுமதி, சுற்றுலா வருவாய் மற்றும் முதலீடுகள் 2026-ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்பதால், இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியையோ அல்லது திவால்நிலையையோ சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |