கட்டுக் கதைகளுக்குப் பின்னால் ஓடும் அரசாங்கம்! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
அரசாங்கம் அன்று தொடக்கம் இன்று வரையில் கட்டுக்கதைகளுக்குப் பின்னால் ஓடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கம்பஹா - தியுலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்கு அபிமானத்தை பெற்றுக் கொடுக்கும் அரசியல் கட்சியே தவிர கண்காட்சி அரசியலை நம்பி செயற்படும் அரசியல் கட்சியல்ல.
அன்று தொடக்கம் இன்று வரையில் அரசாங்கம் கட்டுக்கதையின் பின்னால் ஓடுவதாகவே இருக்கின்றது. தான் உட்பட தனது குழுவினரும் அறிவியல் பூர்வமாக உண்மைகளை எடுத்துச் சொன்ன போது அரசாங்கம் கிண்டலாக சிரித்தனர்.
கொரோனா தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வற்புறுத்திய போதிலும் அரசாங்கம் மாயையின் பின்னாலயே ஓடியது.
இதன் விளைவுகளினாலேயே நாடு இன்னும் பாதிக்கப்பட வேண்டியுள்ளது. அபிவிருத்தியில் பல பிரிவுகள் காணப்படுகின்றது.
அதில் ஒரு பகுதியை மட்டும் சில மாற்றுக் குழுக்கள் வைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.
அவ்வாறு விமர்சிக்கும் அந்த விமர்சகர்கள் யாரும் நடைமுறையில் பிரயோக ரீதியாக வேலைத் திட்டங்களை மேற்கொள்ளாது வாய்ச்சொல் வீரர்களாகவே உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





