மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசாங்கம்! சஜித் பகிரங்கக் குற்றச்சாட்டு
உழைக்கும் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த அரசாங்கம் மிகைக்கட்டண வரியை விதிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், உழைக்கும் மக்களிடம் பணம் சூறையாட மேற்கொண்ட முயற்சியை தாம் தோற்கடித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான ஓய்வூதிய பயனாளிகளுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம - உடமத்தல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் கூறிய வெற்றுக் கோசங்கள் அனைத்தும் இன்று பொய்யாகிப் போய்யுள்ளதாகவும், பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தந்தைமார்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடே உருவாகியுள்ளது.
பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தந்தைமார்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டை எவ்வாறு சுபீட்சமான நாடு என்று கூற முடியும்.
விவசாயிகளுக்கு உரத்தை இல்லாமலாக்கியதும், மல உரம் வழங்கப்பட்டதும், சுபீட்சத்தின் தொலைநோக்கின் பிரகாரமா? தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதற்காக முடிவில்லாமல் பொய்யுரைப்பதையே மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.