உலக சந்தைக்கு நிகராக இலங்கையில் அதிகரிக்கப்படாத எரிபொருள் விலை : அமைச்சர் அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும், அதற்கு இணையான சதவீதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்துக்கு உள்ளாக்கினால், அதற்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையேற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில் "எரிபொருள் விலை 10 ரூபாயால் உயரும் போது, அரசாங்கமாக நாம் 70 ரூபாயை மானியமாக வழங்குகிறோம் என்பதை யாரும் பேசுவதில்லை.

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு இணையான தொகையை நாம் இங்கு உயர்த்தவில்லை. முன்னதாக மானியங்களுக்காக 57 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது.
இனிவரும் மூன்று மாதங்களுக்கும் மேலும் 41 பில்லியன் ரூபாயை மானியமாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த விலை உயர்வின் ஒரு பகுதியைத் தாங்கிக்கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையங்கள்
ஆனால், சில தனியார் எரிபொருள் நிலையங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்திற்கு உள்ளாக்க முயற்சிக்கின்றன.
அவர்கள் கோரும் அளவுக்கு விலையை உயர்த்தி நுகர்வோரைப் பாதிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒப்பந்தங்களின்படி விலை சூத்திரம் அல்லது செலவு அடிப்படையிலான விலையேற்றத்திற்குச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புள்ளது.

ஆனால், அவர்கள் தொடர்ந்து விநியோகத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தினால் சட்டப்படி எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
முதலீட்டாளர்களைப் பாதிப்பது எங்கள் நோக்கமல்ல; அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |