கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்! அரசாங்கத்தை விளாசும் நாமல்
மோசடி மற்றும் ஊழலை மறைப்பதற்காக அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்கவில்லை என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்யுள்ளார்.
கெப் வாகன இறக்குமதிக்கான சட்டவிரோத டெண்டர், துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவித்தல் மற்றும் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல் போன்ற ஊழல் பரிவர்த்தனைகளை விசாரிப்பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் நியமனம் அரசாங்கத்திற்குத் தடையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு உதவி
கணக்காய்வாளர் நாயகத்தின் பதவியுடனான இந்த விளையாட்டை அரசாங்கம் நிறுத்தாவிட்டால், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு கடன்கள் மற்றும் உதவிகளை வழங்குவதை நிறுத்திவிடும் என்றும் நாமல் எச்சரித்துள்ளார்.

உதவி வழங்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் முறையான கணக்காய்வுக்கு உட்பட்டது என்றும், அத்தகைய கணக்காய்வை நடத்த கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் இல்லாத நாட்டிற்கு உதவி வழங்க எந்த நாடும் அல்லது அமைப்பும் முன்வராது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எட்டு மாதங்களாக வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்கு நெருங்கிய கூட்டாளியை நியமிக்க ஜனாதிபதி எடுத்த முயற்சியைத் தடுத்ததற்காக அரசியலமைப்பு சபையை சில அமைச்சர்கள் விமர்சித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |