தமிழர்களின் காணி அபகரிப்பில் மாற்றம் தராத அரசாங்கம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகிறது என முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
65000 ஏக்கர் அரச காணி
“வடக்கு மாகாணத்தில் 65000 ஏக்கர் அரச காணி இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
அரச திணைக்களங்கள் வடக்கு மாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவேபடுகின்றது.
நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள். தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.
வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.
நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.
அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக்காட்டத்தான் வேண்டும் குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





