விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கிய அரசாங்கங்கள்!
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் கொடுத்த அரசாங்கங்கள் கூட இலங்கையில் இருந்திருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் (PSA) செயற்பாட்டாளர் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இல்லை.
தொல்பொருள் என்ற பெயரிலே ஆங்காங்கே இருக்கின்ற பொருட்களை அடையாளம் கண்டு அந்த இடத்தினைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு காணிகளை கையகப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.
ஆயுதப் போராட்டம் என்பது எங்கள் மீது திணிக்கப்பட்டது. எங்களுடைய கட்சியில் கூட ஈழ விடுதலைப் போராட்டம் என்று தான் குறிப்பிடுவோம். ஆயுதப் போராட்டத்தை மீள உருவாக்க கூடாது என்பதில் குறிப்பாக இருக்கின்றோம்.
யுத்தத்திற்கு எதிராக இருக்கின்றோம். ஆனால் ஒரு ஆயுதப் போராட்டம் உருவானதன் நியாயத்தை நாங்கள் மறுப்பதற்கில்லை. அந்தப் போரட்டத்தில் ஈடுபட்டவர்களின் அர்பபணிப்பை மதிக்கின்றோம்.
1983 ஆம் ஆண்டு கொழும்பிலே இடம்பெற்ற அந்த இனஅழிப்பு விடுதலைப்புலிகளில் இணைவதற்கு ஏராளமானோரைத் தூண்டியுள்ளது. அடக்குமுறை, கொலை கலாசாரம், ஆயுதங்களால் நாங்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வு இளைஞர்களை தூண்டியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்த அரசாங்கங்கள் கூட இலங்கையில் இருந்திருக்கின்றது. இவ்வாறு பல சூழ்நிலைகள் இருக்கின்ற போது வெறுமனே விடுதலைப் புலிகளை மாத்திரம் வைத்து ஆயுதப் போராட்டத்தை தீர்மானிக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
