வலுப்படுத்த வேண்டிய தேவையில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் நிலைமை
ஒருவரின் கட்டுப்பாடற்ற நீர்ப்பயன்பாடு மற்றொருவரின் குடிநீர் வளத்தைப் பாதிக்காத வகையில், அனைவருக்கும் பாதுகாப்பான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.10.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது.
இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிலத்தடி நீர் முகாமை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

''புதிதாக அமைக்கப்படும் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு, நீரின் அளவு மற்றும் தரத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், மாசுபாட்டுக்கான ஆபத்துகளைக் கண்டறிதல், நிலத்தடி நீர் வளங்களை வரைபடமாக்குதல், குழாய்க் கிணறுகளை அமைப்பதற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் நிலத்தடி நீரை மீள்நிரப்பும் திட்டங்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி மற்றும் அவற்றை அமைப்பதில் ஈடுபடுவோரின் பதிவுகள் தொடர்பான ஏற்பாடுகள் உள்ளபோதும், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான நிலத்தடி நீர் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவே, குழாய்க் கிணறுகளை அமைத்தல், அவற்றின் பயன்பாடு, நீர் எடுக்கும் அளவு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய திருத்தங்களுடன் கூடிய புதிய வர்த்தமானி அறிவித்தலை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்" என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |