தமிழர் பகுதியில் விசேட அதிரடிக்குழு நடத்திய துப்பாக்கிசூடு - இலக்காகிய இளைஞன்
மன்னார் - பேசாலை காவல்துறை பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் பெரிய கரிசல் பகுதியைச் சேர்ந்த எம்.ஜலீல் (வயது-25) என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், பேசாலை காவல்துறை பிரிவில் உள்ள கரிசல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் உள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.
நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்
பின்னர் இரண்டு விசேட அதிரடிப்படையினர் சிவில் உடையில் குறித்த வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இதன் போது சோதனைகளை முன்னெடுக்க முயன்ற போது குறித்த நபர் கத்தியை எடுத்து தாக்க முயன்ற நிலையில் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது வயிறு மற்றும் கால் பகுதியில் குறித்த நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குறித்த நபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.