நால்வரை கொலை செய்ய திட்டம் வகுத்த துப்பாக்கிதாரிகள் சிக்கினர் :பல ஆயுதங்களும் மீட்பு
கொஸ்கொட, அகாடேகொட பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து நான்கு பேரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் குழுவை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று (03) இரவு சுற்றிவளைத்த நிலையில் இருவர் கைது செய்யபட்டுள்ளனர். மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் செயற்பட்ட காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, சந்தேகநபர்களில் ஒருவர் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அப்போது காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரி ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
இந்த நடவடிக்கையின் போது மேலும் ஒரு சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சோதனையிட்டபோது, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் தயாராக இருந்த பல ஆயுதங்களும் உபகரணங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 9 மி.மீ ரக பிஸ்டல் ஒன்று, அதற்கான 8 தோட்டாக்கள் கொண்ட ஒரு மகசின், ஒரு ரிவோல்வர் மற்றும் 6 தோட்டாக்கள், மேலும் ஒரு 9 மி.மீ துப்பாக்கி மகசின் மற்றும் 6 தோட்டாக்கள், அத்துடன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியன அடங்கும்.
கொலைத் திட்டம் தொடர்பான பல தகவல்கள்
அத்துடன், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்தச் சம்பவத்தை விசாரிப்பதற்காக ASP ஒலுகலவும் நேற்று இரவு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வந்த காட்சிகள் கமெராவில் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட 32 மற்றும் 33 வயதுடைய மஹிந்துருவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தக் கொலைத் திட்டம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த முதலாம் திகதி அஹுங்கல்லவில் சுட்டுக் கொல்லப்பட்ட 'பொடி பெட்டி' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, லொக்கு பெட்டியின் சகோதரனின் மரணத்திற்குப் பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது.
பத்து லட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்கு இந்த குற்றச்செயல்
கரந்தெனிய சுத்தா மற்றும் கொஸ்கொட சுஜீ ஆகிய தரப்புகளுடன் தொடர்புடைய நான்கு நெருங்கிய நபர்களே இவர்களின் இலக்காக இருந்துள்ளனர்.

அஹுங்கல்ல லொக்கு பெட்டி மற்றும் அஹுங்கல்ல சஞ்சீவ ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் பத்து லட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்கு இந்த குற்றச்செயல் செயல்படுத்தப்படவிருந்தது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இலக்கு வைக்கப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள் போல் நுழைந்து, அங்கிருந்த அனைவரையும் சுட்டுவிட்டு, பின்னர் குண்டுத் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல இவர்கள் நன்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |